June 19, 2010

தூவைப்பதியில் தொடங்கும் போர்

19.6.2010

இன்று மீண்டும் உயிரியல் பூங்கா கும்பல்கள்   ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்றப்போவதாக தகவல்கள் வந்ததையடுத்து  தூவைப்பதிஆதிவாசிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி  காத்திருக்கின்றனர்

குழந்தைகள் முதல் தள்ளாடும் பெருசுகள் வரை தங்கள்  நிலத்தை காக்க உறுதியோடு நின்றிருக்கிறார்கள்

June 17, 2010

மனித உரிமைவாதிகள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா? -ச பாலமுருகன்


நமது மத்திய இந்தியாவில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்டுகளின் இயக்கம் அரச படைகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகிறது. பாரத பிரதமர் மன்மோகன் சிங் ‘மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்’ என்று வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகள் என்று மாவோயிஸ்டுகளை அழைத்து வந்த ஆங்கில காட்சி ஊடகங்கள் கடந்த ஓராண்டில் சிகப்பு பயங்கரவாதிகள் என்று பெயர் மாற்றி அழைக்கத் துவங்கி விட்டன. CNN IBN ஆங்கிலத் தொலைக்காட்சி நக்சல் என்ற ஆங்கில எழுத்தில் வரும் ஓ என்ற சொல்லை பெரியதாகக் காட்டி அது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை வெளிப்படுத்தி வருகிறது.
adivasi_women 

மாவோயிஸ்டுகளின் வன்முறைத் தாக்குதல்கள் நிகழும் சமயம் இந்தக் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் நாடகபாணி பின் இசைகளுடன் செய்திகளை பரபரப்பாக்கி வெளியிடுவதும், விவாதம் நடத்துவதும் நடக்கிறது. இவ்விவாதங்களில் மனித உரிமை ஆர்வலர் ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களை நீங்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளரா என்ற வகையில் கேள்விகளைக் கேட்பதும், ஆனால் கேள்விக்கு மனித உரிமையாளர்கள் பதில் தரும்போது அதனை முழுதும் உள்வாங்காது அலட்சியப்படுத்துவதுமான போக்குகளும் தொடர்கின்றன. மாவோயிஸ்டுகள் காவல்படைகளுடன் மோதிய அன்னைத்து நிகழ்வுகளுக்குப் பின்னும் இவ்வூடகங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதப் பொருளாகி வந்துள்ளனர். 


கடந்த 07.04.2010-ம் தேதி மாவோயிஸ்டுகள் 76 சி.ஆர்.பி.எப். படையினரை கொன்ற நிகழ்வு, பேருந்து கண்ணி வெடியில் சிக்கிக்கொண்ட நிகழ்வு, இரயில் கவிழ்ப்பு - இவைகளுக்குப் பின் நாள்கணக்கில் நாடக பாணியில் ஒரு சேர ஆங்கில தொலைக்காட்சிகள் மனித உரிமையாளர்களைத் திட்டித் தீர்ப்பதைக் காண முடிந்தது. சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கள் தலையங்கங்களில் மனித உரிமையாளர்களுக்கு இனி நல்ல பிள்ளைகளாக நடக்கச் சொல்லி அறிவுரை கூறின. புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், வங்க எழுத்தாளர் மகேஸ்வதா தேவி போன்றோர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று இவைகள் முத்திரை குத்தி விட்டன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்களை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக மிரட்டி வருகின்றார். இதன் எதிர்வினையாக மகேஸ்வதாதேவி தன்னை கைது செய்வது பற்றி கவலைப்படவில்லை என்றும், அதற்கு முன் தனக்கு நக்சல்பாரி தொடர்பு உள்ளதை ப.சிதம்பரம் நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விட்டார்.

கடந்த 2010 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கொல்லப்பட்ட அன்று Times Now தொலைக்காட்சி திரைப்படக் கலைஞர் அபர்ணா சென்னிடம் பேட்டி கண்டது. அப்பேட்டியில் அவர் இந்த வன்முறைக்கு அரசுதான் காரணம், இவ்வாறு நிகழக்கூடாது என்பதால் தான் தாங்கள் ‘பச்சை வேட்டை’ கூடாது என்று பேசி வந்ததாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அத்தொலைக்காட்சி ‘துரோகி’ என்று தலைப்பும் கொடுத்தது. யார் தேசபக்தன், யார் துரோகி என்பதை - ஒரு மனிதனின் அரசியல் நேர்மையை - கண நேரத்தில் முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்ற அதிகார மையங்களாக இத்தொலைக் காட்சிகள் உருவாகி விட்டது ஆச்சரியமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. 
வணிகப்போட்டி சூழலில் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்திகளை முந்தித் தருவதிலும் அதன் மூலம் தங்களின் TRP என்ற இலாப வணிகத்தை உயர்த்தவும் தொடர்ந்து பரபரப்பான செய்திகளுக்குப் பின்னே இவை ஓடிக்கொண்டே உள்ளன. கொலைகள், பாலியல் வன்முறை உள்ளிட்ட பலவற்றை நாள் கணக்கில் ஒளிபரப்பி பார்வையாளர்களை திகிலடைய வைப்பதுண்டு. பிரபஞ்சம் பிறப்பு குறித்த “பெரும் வெடிப்பு” சோதனை நிகழ்வை இத்தொலைக்காட்சிகள் கண்டு கொள்ளாத சூழலில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அச்செய்தியை வெளியிட இந்த கூட்டு ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் பின் இந்த நிகழ்வு பற்றி இத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. ஆனால் இதே ஊடகங்கள் டெல்லியில் 14 வயது சிறுமி அனுர்சி கொலை செய்யப்பட்ட செய்தியையும், அதில் அப்பெண்ணின் தந்தை டாக்டர்.தல்வார் என்பவர் காரணமாக உள்ளதாகவும் தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு புலனாய்வுத் துறையை நிர்ப்பந்தப்படுத்தியது. வேறு வழியின்றி அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். கைதான நபர் அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பின்னர் நடந்தது. இதுபோன்ற பரபரப்பான செய்திக் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட‌, அறிவியல் அற்புதமான பெருவெடிப்பு போன்ற நிகழ்வுகளுக்குத் தரவில்லை. 
மாவோயிஸ்ட் பிரச்சனையில் 2010 மே 17-ம் தேதி NDTV தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு பெரிய அளவில் அதிகாரம் தேவை என்றும் வான்படைத் தாக்குதலுக்கு ஆதரவு தேவை என்றும் மாநில முதலமைச்சர்கள் இதனை விரும்புவதாகவும் கேட்டுக் கொண்டார். மென்மையாகவும், நயமாகவும் உள்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டும் அதே தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்தான் மனித உரிமை ஆர்வலர்கள் பழங்குடி மக்களுக்காகப் பரிந்து பேசும்போது மாவோயிஸ்டு ஆதரவாளர்களா என்று கேட்டவர்கள். உண்மையில் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 2004 வரை வேதாந்தா குழுமம் என்ற பகாசுர பன்னாட்டு கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். அதற்காக வருடத்திற்கு 70,000 டாலர் சம்பளம் பெற்று வந்தார். (1) கம்பெனி பழங்குடி மக்களின் நிலங்களை சட்ட விரோதமாக அபகரித்ததற்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கும் பல சான்றுகள் உள்ளன. 2003-ம் ஆண்டு இந்த நிறுவனம் சுங்க வரி மோசடி செய்ததற்கு நடவடிக்கை எடுப்பதிலிருந்து தடுக்க ப.சிதம்பரம் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்றுத் தந்தார். அவர் நிதியமைச்சர் ஆன பின்பும் சுங்கவரி பாக்கியை வசூ்லிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சட்ட விரோதமாக அரசாங்கப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டும் உள்ளது என பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் ப.சிதம்பரத்தைப் பார்த்து ஒரு நேர்மையான ஊடகம் அது குறித்தான கேள்விகளை கேட்டிருக்க முடியும். ஆனால் இவை அதுபற்றி கேட்டு ப.சிதம்பரத்தை சங்கடப்படுத்தத் தயாராக இல்லை.


அமெரிக்காவில் 1946 ஆம் ஆண்டு ஜோசப் ஆர்.மெக்கார்தே என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு விஸ்கான்சின் பகுதி நீதிபதியாக பணிபுரிந்தவர். 1950 வரை இவரைப் பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் 1950-ல் இவர் தன் அதிரடியான பேச்சுக்களால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்க அரசின் துறைகளில் 205 கம்யூனிஸ்டுகள் ஊடுருவி விட்டதாகவும் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். இப்பரபரப்பில் 1952-ல் மீண்டும் இவர் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் செனட்டர்களின் புலனாய்வு கமிட்டிக்கு இவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த அதிகாரத்தை வைத்து இரண்டு ஆண்டுகளில் தான் சந்தேகப்படும் பலர் மீது கம்யூனிஸ்ட் என்ற குற்றச்சாட்டை சுமத்தி பணிநீக்கமும் செய்தார். தனது ஆதரவாளர்களுக்கு தன்னை தேசபக்தனாகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதனாகவும் காட்டிக் கொண்ட மெர்கார்த்தேயின் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான புளுகு மூட்டை என்பதும் மெக்கார்த்தே ஒரு தேர்ந்த புளுகினி என்பதையும் 1954-ல் அறிந்த அமெரிக்கா, சிவில் உரிமைகளை மறுத்த மெக்கார்த்தேயின் செயல்பாடுகளுக்காக அவரை கைது செய்தது. அப்பட்டமான புளுகுகளை அவிழ்த்து விடுவதும் தன்னுடன் சேராதவர்கள் எதிரியின் ஆட்கள் என சவடால் விடுவதையும் மெக்கார்த்தேயிசம் என்று அழைக்கப்படுகிறது. 

ப.சிதம்பரம் மனித உரிமை ஆர்வலர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா என்று கேட்பதும், தொலைக்காட்சிகள் ‘எங்கே போனார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்’ என்று கேலி செய்வதும் இந்த மெக்கார்த்தேயிசம் தான். மெக்கார்த்தேயிசம் பாசிச சிந்தனைப் போக்கின் இணைபிரியாத சக்தியாக இருந்து வந்திருக்கிறது. முன்பு அமெரிக்கா இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11, 2001-ன் போது அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் சொன்னார் ‘நீங்கள் எங்களோடா அல்லது எதிரிகளோடா?’ என்று. பாரதீய ஜனதாக் கட்சி பொடா சட்டத்தைக் கொண்டு வந்த விவாதத்தின்போது எல்.கே.அத்வானி சொன்னார் “பயங்கவாத தடுப்புச் சட்டமான பொடாவை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்” என்று. 
 கடந்த 2010 பிப்ரவரி 18-ல் டெல்லி தீன் வடிகால் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் கோபன் காந்தி என்பவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப் பத்திரிக்கையில் அரச வன்முறையை விமர்சனம் செய்த PUCL உள்ளிட்ட சில மனித உரிமை இயக்கங்கள் மாவோயிஸ்ட் அமைப்பின் வெகுஜன அமைப்புகள் என்று முத்திரை குத்தப்பட்டது. இந்திய உளவுத்துறை மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவு இயக்கங்கள் என்று PUCL உள்ளிட்ட 57 இயக்கங்களின் பெயர்களை வெளியிட்டு அவைகளைக் கண்காணிக்கும் வேலையும் செய்து வருகிறது. 


கடந்த 2007 மே-17ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநிலத்தின் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) செயலரான டாக்டர்.பினாயக் சென் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என முத்திரை குத்தி கைது செய்யப்பட்டார். அரசின் மெக்கார்த்தேயிச பிரச்சாரத்தால் உச்ச நீதிமன்றத்தில் கூட பிணை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கடும் சிறைவாசத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. நாடு முழுவதும் பல மனித உரிமை ஆர்வலர்கள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சத்தீஸ்கரில் ஆவணப்பட தயாரிப்பாளர் டி.ஜே.அஜ‌ய் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 2010 பிப்ரவரியில் PUCL உத்திரபிரதேச மாநிலச் செயலாளர் திருமதி. சீமா ஆசாத் என்பவர் டெல்லி புத்தக கண்காட்சிக்குச் சென்று திரும்பும் வழியில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி அவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். இவர் தன் பத்திரிக்கையில் பழங்குடிகளுக்கு எதிரான அரச வன்முறையை விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சத்தீஸ்கரில் வனவாசி சேட்னா ஆசிரமம் என்ற காந்தி வழி ஆசிரமத்தை நடத்தி வருபவர் ஹிம்மன்ஸ் குமார் என்ற PUCL அமைப்பைச் சார்ந்தவர். இவரது ஆசிரமம் சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையாலும் அரசப் படைகளாலும் உடைத்து எறியப்பட்டது. ஹிம்மன்ஸ் குமார் அரச வன்முறையைக் கண்டித்து மனித உரிமைகளுக்காகப் பேசி வந்தார் என்பதே அந்த காந்தியவாதி செய்த பிழை. 


சில மாநிலங்களிலிருந்த நக்சல்பாரி இயக்கச் செயல்பாடு இன்று 250 மாவட்டங்கள், 23 மாநிலங்கள் என்று விரிவடைந்ததற்கு காரணங்களைத் தேட வேண்டியது அவசியமானது. நமது அரசியலமைப்பின் முகப்புரை இந்தியா ஒரு ஜனநாயக சோசலிச நாடு என்று பறை சாற்றுகிறது. நமது அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை மாநிலங்கள், அரசுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சொல்கிறது. இயற்கை வளங்கள் பொது சமூகப் பயன்பாட்டிற்கு என்றும், ஏழைகள், பணக்காரன் என்ற பாகுபாடு சமூகத்தில் மறைய வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நமது அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை பழங்குடி மக்களின் நிலங்களை அம்மக்களின் கவுன்சில் அனுமதியின்றி பிற கம்பெனிகளோ, நபர்களோ அபகரிப்பதைத் தடை செய்கிறது. மேலும் 2005-ம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய வன உரிமைச் சட்டம் பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கும் சட்ட வழி வகைகளைக் கொண்டுள்ளது. 

இவ்வகையான பல்வேறு சட்ட பாதுகாப்புகளும் அதனை அரணாக நின்று காக்க நீதிமன்ற அமைப்புகளும் இருக்கும் சூழலில் ஏன் நக்சல்பாரிகளின் மாவோயிசம் வளர்கிறது? ஏனெனில் நமது அரசியலமைப்பின் உரிமைகளையும், நமது ஜனநாயக உயிர்ப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் நமது ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், செல்வந்தர்களின் கூட்டு செல்லரிக்கச் செய்து வீழ்த்தி தோல்வி பெறச் செய்த இடத்திலிருந்தே மாவோயிஸ்டுகளுக்கான சிந்தனையும், ஆதரவும் வேர் விடுகின்றது. உலக மயமாக்கல் என்ற பொருளாதார வன்முறை ஏழை, எளிய பழங்குடி மக்களின் மீது திணிக்கப்பட்ட சமயம் நமது பாராளுமன்றங்கள், நிர்வாகத்துறை, நீதித்துறையின் செயல்பாடுகள் முழுவதும் ஜனநாயக சோசலிசம் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறி முதலாளித்துவ சேவை என்ற நிலைக்கு சென்று விட்டது. மத்திய இந்தியாவில் பழங்குடிகளை ஆயுதம் தூக்கச் செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கை விட ஜனநாயகத்தை தடம் புரளச் செய்த நமது ஆட்சியாளர்களின் பங்கே அதிகம். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் 28 வகை பெரும் கனிமங்கள் கிடைக்கின்றன. இரும்புத்தாது இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இது உள்ளது. பாக்சைட், டால்மியம் உள்ளிட்ட பல கனிமங்கள் இங்கு உள்ளது. இப்பூமியில் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் நிலச் சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் இப்பகுதியில் முன்பு மேற்கொள்ளப்பட்ட நில ஆர்ஜித முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதையும் எனவே கனிம வளங்களை எடுக்க வேறு முயற்சி அரசுக்கு தேவைப்பட்டதையும் சுட்டிக் காட்டியது. (2) எனவே ‘அமைதி இயக்கம்’ என்ற சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியது அரசு. இப்படைகளுக்கு இரும்பு கம்பெனிகளான டாடாவும், எஸ்ஸாரும் பெரும் தொகை கொடுத்து உதவி வருகின்றன‌. இக்கூலிப் படைகள் அரச படைகளுடன் சேர்ந்து மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களை பழங்குடி மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டனர். கொலைகள்? பாலியல் வன்முறை? சித்திரவதை என அது நீண்டது. அதன் விளைவாக சத்தீஸ்கர் மாநில தண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 664 கிராமங்களை முற்றிலும் கைவிட்டு பழங்குடி மக்கள் பக்கத்திலுள்ள மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திரா காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். காலியான இப்பகுதிகளை சுரங்க நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளதாக அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. (2) 


 சத்தீஸ்கரில் உள்ள கனிமங்களை இரயில் மூலம் கொண்டு செல்வதற்கு அதிகப் பணம் செலவாகிறது என்பதற்காக குழாய்கள் மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்பெனிக்கு நேரிடையாக கொண்டு செல்ல எஸ்ஸார் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கு எதிராக 25 மீட்டர் அகலத்தில் 267 கிலோ மீட்டர் குழாய்கள் சத்தீஸ்கரிலிருந்து விசாகப்பட்டினம் வரை கட்டப்பட்டது. இதில் இரும்பு தாதுக்களுடன் தண்ணீர் கலந்து அனுப்பப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 2.5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.(3) எனவே எஸ்ஸார் கம்பெனிக்காக சபரி ஆற்றின் பெரும்பகுதி திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று சத்தீஸ்கரில் ஓடும் முக்கிய நதிகளான கேலு, குர்குட், கருணா, சியோநாத், மானத் போன்ற ஆறுகளும் தனியார் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராய்க்கர் என்ற ஊரின் வழியாக சென்ற கேலு நதி ஜிண்டால் இரும்பு மற்றும் மின்சார நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டாகி விட்டது. தினமும் 35,400 கியூபிக் மீட்டர் தண்ணீரை இந்த ஆலைகள் தாங்கள் கட்டியுள்ள தனியார் அணைகள் மூலம் எடுத்துக் கொள்கின்றன.(4) ஆக பழங்குடிகள், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான‌ தண்ணீர் பயன்பாட்டு உரிமையை முற்றிலும் இழந்து விட்டனர். 
 tribes_331
நமது வளர்ச்சித் திட்டங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பொது நலனைப் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் உருவாக்கப்பட்டவை. இதனால் உலகில் வேறு எங்கும் நிகழாத ஒரு பெரும் சோகம் இங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட எளிய மக்களின் எண்ணிக்கை 6 கோடியாகும். இதில் பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களை அடிமை வியாபாரத்திற்கு உட்படுத்தியதால் 200 ஆண்டு சோக நிகழ்வில் இடம் பெயர்ந்த கருப்பின மக்களின் எண்ணிக்கையே 5 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.(5) இவ்வாறு சொந்த நாட்டில் அகதிகளாக ‘வளர்ச்சிக்காக’ இடம் பெயரச் செய்யப்பட்ட இம்மக்களுக்கு அரசின் மறு வாழ்வு என்பதும் வெறும் கான‌ல் நீரே. ஆக மலைகளிலும், வனங்களிலுமிருந்து இம்மக்கள் விரட்டப்படுவது குறித்துப் பேசுபவர்கள், அரசின் பொருளாதார வன் செயல்களையும், அரச வன்முறைகளையும் விமர்சிப்பவர்கள் காட்சி ஊடகங்கள் மற்றும் இதர அரசின் ஊதுகுழல்களில் முக்கிய இலக்காக குறி வைத்து தாக்கப்படுகின்றனர். 

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) தவிர பழங்குடி மக்கள் மீதான அரச வன்முறையை ஆதரிக்கின்றன. மாவோயிஸ்ட் பிரச்சனையில் பாரதீய ஜனதா கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. கனிம வளங்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அனுமதிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பின் ஆட்சியாளர்களுக்கு வரும் பெரும் இலாபம் பற்றி விரிவாக விவாதிக்கத் தேவையில்லை. சமீபத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் கணக்கில் வராத சொத்து மதிப்பு மட்டும் ரூ.4000 கோடிக்கு மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு, ஜனநாயகம் என எல்லா வகைக் கூறுகளையும் தூக்கி எறிந்து விட்ட இக்கொடிய பொருளாதார வன்முறையையும், அதைப் பாதுகாக்கும் அரச வன்முறையையும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரிப்பது வெட்கக்கேடானது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பெருத்த பின்னடைவும் கூட. 


இச்சூழலில் மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் மட்டுமே ஒற்றைக் குரல்களாக இக்கொடுமைகளுக்கு எதிராக ஒலிக்கின்றன‌. எனவே மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), அருந்ததிராய், அபர்ணாசென், மகேஸ்வதாதேவி மற்றும் பிற மெல்லிய எதிர்ப்புக் குரல்களை நசுக்கிவிடத் துடிக்கிறது அரச வன்முறை. தாக்குதலை நியாயப்படுத்த தாக்குவதற்கு முன் வெறிபிடித்து விட்டது என்ற கதையாடல்கள் பரப்ப ஆதாய செய்திகளை (Paid News) வெளியிடும் ஊடகங்கள் தேவைப்படுகிறது. இவ்வூடகங்களின் கருத்துருவாக்கம் போலீஸ் மனநிலையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. அது சமூகத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பயங்கரவாத இயக்கத் தொடர்பு, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், வன்முறையாளர்கள் என மெக்கார்தேயிசத்தை வெளிப்படுத்துகிறது. 



அரச வன்முறைக்கு எதிராக ஜனநாயகக் கடமையாற்றுவது என்பதை பல்வேறு சூழல்களில் உயிருக்கும், வாழ்க்கைக்கும் அஞ்ச வேண்டிய நிலைக்கு அரச வன்முறை தள்ளுகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்களும், ஜனநாயக சக்திகளும் அரச வன்முறைக்கு மிக எளிய இலக்காக மாற்றப்படுகின்றனர். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, கொலை என பல்வேறு இழப்புகளைக் கொடுத்து ஜனநாயகத்திற்காக நாடு முழுவதும் மக்கள் ஆதரவு சக்திகள் போராடி வரும் நிலை உள்ளது. மனித உரிமை சக்திகளின் செயல்பாடு வெளிப்படையானது, ஜனநாயகப் பூர்வமானது, சட்ட ரீதியானது. மேலும் சமூக அமைதியை மையமாகக் கொண்டது. சட்டத்தை மதிக்கும் அறப்பண்புள்ள யாரும் இவர்களை விரோதிகளாகப் பார்க்க முடியாது. PUCL தேசிய‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர் சின்கா கூறிய‌தைப் போல‌, ம‌னித‌ உரிமை செயல்பாட்டாள‌ர்க‌ள் பணி ஒரு ம‌ருத்துவரின் பணி போல‌த்தான். எந்தவொரு கொடிய குற்றவாளிக்கும் மருத்துவ உரிமையை மறுப்பது கூடாது என்பதைப் போலத்தான், அவருக்கான மனித உரிமைகளை மறுப்பதும். 



நீங்கள் யார் பக்கம் என்ற கேள்விக்கு, நாங்கள் வறுமையில் வாடும் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்படும் ஆதரவற்ற அந்த மக்களின் பக்கம். நாங்கள் அவர்கள் பக்கம் நிற்பது போல மாவோயிஸ்டுகள் பல சமயங்களில் நிற்கிறார்கள். அதற்காக மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. உண்மையில் ஏழைகளைப் புறக்கணிக்கும் இந்த அரசும் சொந்த மக்களின் மீது பச்சை வேட்டை என்ற பெயரில் விமானப்படை தாக்குதலுக்குத் தயாராகி வரும் அரச பயங்கரவாதம், வன்முறைகளுக்கெல்லாம் தலையானதாகவும், வரலாற்று பிழையாகவும் இருக்கப் போகிறது. 'நீங்கள் யார் பக்கம்? மாவோயிஸ்ட் பக்கமா? அரசு பக்கமா?' என்ற தொலைக்காட்சி வர்ணணையாளர் கேள்விக்கு நாம் வைக்கும் எதிர்க் கேள்வி 'ஊடகங்களே! நீங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் பக்கமா? இந்திய ஏழைப் பழங்குடி மக்களின் பக்கமா? இந்நாட்டில் ஏழை, எளிய பழங்குடி மக்கள் மனித கண்ணியத்தோடு வாழும் உரிமை அவர்களுக்கு உள்ளதா, இல்லையா? சொந்த மக்களைக் கொன்றொழிக்க போர்ப் பிரகடனம் அறிவிக்க இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச சிறுதார்மீக உரிமையாவது உள்ளதா?'

June 15, 2010

ஒடியன் -புகைப்படங்கள் -சத்தியமங்கலம் நிகழ்வு


இன்று சத்தியமங்கலம் நகராட்சிக்கட்டிடத்தில் ஊராளி,சோளகர்,மலையாளி குரும்பர் முடுகர் இன ஆதிவாசிகள் நிறைந்திருந்த கூட்டத்தில் ஒடியன் நூல் அறிமுகம் நடைபெற்றது நூலை வழக்கறிஞர் ப.பா மோகன் வெளியிட கருப்புசாமி பெற்றுக்கொண்டார்


அவர்கள் வாழ்விற்க்காக தங்கள் வாழ்வை தியகப்படுத்திக்கொண்ட ரங்கசாமி மோகன்குமார்,பாலதண்டாயுதம், குணசேகர் பணையம்பள்ளி சுந்தர் ஆதிவாசிகள் மேல் சோடிக்கப்படும் எல்லா வழக்குகளையும் தொடர்ந்து நொறுக்கிக்கொண்டிருக்கும் ப பா மோகன் ஆகியோர் புததகம் குறித்து உரையாற்றினார்கள்

கூட்டத்தில் கல்ந்துகொண்ட ஆதிவாசிகள் தங்கள் ஆடைகளுக்குள் முடிந்திருந்த காசுகளை எண்ணி எண்ணி புத்தகத்தை வாங்கிக்கொண்ட காட்சி என்னை கண்கலங்கவைத்தது

இறுதியில் புத்தக விற்பனையில் வந்த பணத்தை அவர்கள் சங்க வளர்ச்சிப்பணிகளுக்கு ஒப்படைத்தேன் பலத்த கட்டாயப்படுத்தலுக்கு பின்பே அப்பணத்தை பெற்றுக்கொண்டனர்

வாழ்வில் மறக்கமுடியாத நாளாய் இந்நிகழ்வை மாற்றிய ஆதிவாசி மக்களுக்கும் அவர்களோடு வழிநடந்துகொண்டிருக்கும் அத்தோழர்களுக்கும் நன்றி சொல்லி கனத்த மனதோடு விடைபெறவேண்டியிருந்தது

June 09, 2010

ஆற்றங்கரை -ச.பாலமுருகன்

நீங்கள் எப்போதாவது மங்கிய வெளிச்சத்தில் மாலைப் பொழுதுகளில் தூய்மையான படிக்கட்டுகளில் அமர்ந்து உங்கள்முன் சலசலத்து ஓடும் ஒரு நதியினை ரசித்தது உண்டா? அந்த ரசிப்பில் நீங்கள் புதிய பலவற்றை அறிந்து கொள்ள முடியும். நான் காவேரியின் கரையில் அமர்ந்து பலசமயம் அதனை ரசிப்பதுண்டு. தண்ணீரின் சப்தம், அதில் காற்று உரசிச்செல்லும் ஒளியுடன் சூழும் புத்துணர்வு என்னை அமைதிபடுத்தும். 

நான் சிறிதுநேரம் அதனை உற்றுப்பார்த்த பின்பு அது என்னோடு பேசத்துவங்கும். முதலில் ஒரு அந்நியனைப் போல எனக்கு சொல்லி பின் ஒரு தோழனைப்போல நெருங்கி இறுதியில் ஒரு ஆசானைப்போல உருமாற்றமடையும் மாற்றங்களை நான் அனுபவித்துள்ளேன். தூரத்தில் காவேரியின் நெடுஞ்சாலை பாலத்தில் ஒரு லாரியின் உறுமல் கேட்கிறது. விட்டு விட்டு இந்த சப்தம் வரும். ஆட்கள் எழுந்து வீடுகளுக்கு போய்விட்டனர். என்னைப்போல ஒரு சிலர் இன்னமும் ஆற்றை விட்டு பிரிய மனமின்றி படிக்கட்டுகளில் சாய்ந்துள்ளனர். கூடுதுறை கோயிலின் இறுதிப் பூசையின் மணியோசை கேட்கிறது.

நம் குடும்பத்தார்களிடம் பாதுகாப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. யாரும் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக ஆற்றில் குளிக்க விடமாட்டார்கள். நானும் அப்படியே வளர்ந்தேன். என் சக பள்ளி நண்பர்கள் ஆற்றில் குதித்து மூழ்கி விளையாடும்போது வீட்டுக் குளியலால் நீச்சல் பழக்கமற்ற நான் கரைகளில் உட்கார்ந்து மற்ற நண்பர்களை ரசித்துக்கொண்டிருப்பேன். என்றாலும் அவர்களைப் போல நீந்தமுடியவில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாக இருக்கும். பள்ளி விடுமுறைகளில் சிறுவர்களுக்கு ஆற்றின் கரை ஓரம் விளையாட ஏராளம் இருக்கும். கரையில் ஓரமாய் நீந்தும் குட்டி மீன்களை தரைக்கு தள்ளி பாட்டில்களில் அடைத்து எடுத்துச் செல்லலாம். விளையாட்டுப் பொருட்கள் கிளிஞ்சல்கள், கூழாங்கற்கள் என அது நீளும்.

நான் சிறிது நேரம் தென்படாவிட்டாலும் பாட்டி என்னைத் தேடி வந்துவிடுவாள். நான் இருந்தேனென்றால் கடுமையாக என் சக நண்பர்களை திட்டியபடி என்னை இழுத்து வந்துவிடுவாள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரைக்கும் எனக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விடுவேன் என்று பொத்தியே சைக்கிள் ஓட்டவும் தெரியாமலிருந்து வந்தேன். 

எனக்குமுதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தவன் சிவலிங்கம். அவனின் சைக்கிளில் குரங்கு பெடல் அழுத்தி பழகி பின் வட்ட வடிவில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவனின் சைக்கிளில் அவனை பின்னே உட்கார வைத்து நான் ஓட்டினேன். நான் அன்று அவனது அக்காளின் வீட்டிற்கு குமாரபாளையம் போக வேண்டும் என்று நச்சரித்தான். சைக்கிள் விட நானும் வருவதாக கூறி அவனுடன் சென்றேன். 

நாங்கள் காலை பத்துமணி சுமாருக்கு ஊரின் ஓரப்பகுதியில் புதிதாக கட்டிடங்கள் உருவாகிக்கொண்டிருந்த ஒரு இடத்தில் லைன் வீட்டில் அவன் அக்காள் வீட்டினை அடைந்தோம். அவன் அக்காளின் கணவன் ஒரு பழைய இரும்பு வியாபாரி. சமயத்தில் கிடைக்கும் வேலை செய்பவன். அன்று அவன் சணல் பைகளை எடுத்து சுருட்டி அவரின் அகன்ற சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு, "அடுப்புக்கரி அள்ளவேண்டும் வந்தால் நல்லது" என்று சிவலிங்கத்திடன் சொன்னான். 


சிவலிங்கம் என்னையும் கூப்பிட்டான். "இரண்டு மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும்... அடுப்புக்கரி சிதறியிருக்கும் அதை சணல் பையில் போட்டு கட்டி எடுத்துவிட வேண்டியதுதான்" என்று சொன்னான். அவனது பெயர் ராமன் என்பதனை அகன்ற கேரியர் வைத்த சைக்கிளில் எழுதப்பட்டிருந்ததில் நான் அறிந்து கொண்டேன். சிவலிங்கத்துடன் இருப்பது எனக்கு பிடிக்கும் என்பதாலும் மதியத்திற்குள் வீடு திரும்பிவிடலாம் என்று ராமன் சொன்னதாலும் அவர்களுடன் செல்ல சம்மதித்தேன். நாங்கள் பேருந்து ஏறிக் கொண்டோம். 

அந்த சாலை காவிரி ஆற்றை ஒட்டிச் செல்லும் பாதை. நாங்கள் ஒரு மணி நேர பயணத்திற்குப்பின் சமயசங்கிலி என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கினோம். சாலையிலிருந்து விலகி சரிவாய் செல்லும் பாதையில் இறங்கி நடந்தபோது காவேரி ஆறு தெரிந்தது. அப்பகுதியில் ஆற்றில் சிறுசிறு தீவுகளைப் போல நிலப்பகுதியும் பாதையும் அதில் உயர வளர்ந்த புற்களும், சிறுமரமும் நிறைய இருந்தன. 

அதனைச் சுற்றி காவிரி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த தீவு திட்டுகளில் வெந்நிறமாய் புகை எழுந்து கொண்டிருந்தது. இவ்வாறு ஆங்காங்கிருந்த சில திட்டுகளில் புகை வந்து கொண்டிருந்தது. "நாம் அந்த திட்டுலதான் கரி அள்ளனும்' என்று கைகளை நீட்டிக் காட்டினான் ராமன்.

என்னங்க அங்கே புகை வருது? என நான் கேட்டதும் சற்று சிரித்துக் கொண்டு சொன்னான் ""அங்கே பொங்க வைக்கிறாங்க""

அவன் நையாண்டி செய்வது தெரிந்து கொண்டேன். பின் திரும்பச் சொன்னான் ""சாராயம் காய்ச்சராங்கப்பா""

சாராயம் காய்ச்சும் இடமா? சாராயம் விற்பவர்களை நான் பவானி ஆற்றங்கரைகளில் பார்த்திருக்கின்றேன் ஒரு அலுமினியப் பாத்திரத்தில் மறைவாக வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஒரே கண்ணாடி டம்ளரில் எல்லோரும் வாயை வைத்து குடிப்பார்கள். சாராயக்காரர்கள் போக்கிரிகள். குடிகாரர்களுக்கு போதை அதிகமாகும்போது அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்வார்கள். பணம் இல்லாதவர்களை அடிப்பார்கள். என என்னுள் பதிந்திருந்தவைகள் எனக்குள் சொல்லிக்கொண்டது. 

சாராயம் காய்ச்சும் இடத்தில் நாமா? வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் என்னாவது? ஓடிவிடலாமா? அவ்வாறு ஓடினால் சிவலிங்கம் வருத்தப்படுவான். ராமனும் சிவலிங்கமும் என்னை பயந்தாங்கொள்ளி என ஏளனம் செய்வார்கள். மேலும் பேருந்துக்கு பணமில்லை. இரண்டு மணி நேரம் தானே... எதையும் வெளிப்படுத்தாமல் இருந்துவிடலாம் என்று என்னுள் ஆறுதல் கூறிக்கொண்டேன். அப்போது சாராயம் காய்ச்சுவது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளலாமே என்று சிறு ஆசையும் வந்து அச்சமும், குழப்பமும் இருந்த நிலையில் வேடிக்கை காட்டியது.

கரையிலிருந்து தீவு திட்டினை நோக்கிப் புறப்பட்ட ஒரு பரிசலில் நாங்கள் ஏறிக்கொண்டோம். அந்த பரிசலில் ஒரு மூட்டை நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் விறகுகள் இருந்தது. அந்த மூட்டை மீது நாங்கள் உட்கார்ந்து கொண்டோம்.

""ஊறலுக்கு சர்க்கரையா? "" என்று ராமன் பரிசல்காரரிடம் கேட்டான்.

பரிசல்காரன் ஆமாம் என தலையசைத்தான். பின் அடுப்புக்கரி டீக்கடைக்கா போடப்போறே என்றான்.

இல்லை பட்டறைக்கு பயன்படும். பெரிய லாபமிருக்காது என்று சிரித்தான் ராமன். பின்னர் இருவரும் பீடியை பற்ற வைத்துக்கொண்டார்கள். காவிரியின் வேகம் அதிகமாகவேயிருந்தது. பரிசலின் துடுப்பு சற்று எதிர்த்திசையில் அழுத்தி போடப்போட நாங்கள் நீரோட்டத்தில் நேரே தீவை நோக்கி முன்னேறினோம்.

போலீஸ் வருவாங்களா? என்றான் ராமன். எப்பவாவது வருவாங்க, வந்தா தண்ணில குதிச்சு ஈரோட்டு பக்கம் கரைக்கு போயிடவேண்டியதுதான் என சிரித்தான். 

என்னுள் மீண்டும் அச்சம் எழுந்தது. சிவலிங்கத்தை பார்த்தேன் அவனும் சற்று பயந்தே காணப்பட்டான். நாங்கள் ஒரு திட்டை நெருங்கினோம். அங்கு இடுப்புயரம் புற்கள் முளைத்திருந்தது. அதனை அவர்கள் குட்டு என்று அழைத்தார்கள். அதில் சீமை வேலான் மரம் குடைபோல படர்ந்திருந்தது. புற்களின் மேல் புகை வந்து கொண்டிருந்தது. குட்டை நெருங்கியதும் பரிசல்காரன் கீழே இறங்கி பரிசலை திட்டை நோக்கி சற்று தள்ளினான். பரிசலை பார்த்து புற்களுக்கு வெளியே இருவர் வந்தார்கள். இருவரும் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்கள். 

பரிசலில் இருந்த சர்க்கரை மூட்டையை தூக்கினர். நாங்களும் அதற்கு உதவினோம். நாங்கள் புற்களை தாண்டிச் சென்ற போது அங்கே ஒரு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த அடுப்பில் ஒரு பெரிய பானையிருந்தது. அதற்கு மேலே இன்னொரு பானை வைக்கப்பட்டிருந்தது. மேல் பானையில் ஒரு குழாய் நீட்டிக்கொண்டிருந்தது. அதன் முனை கட்டையால் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பானைக்கும் மேலே அகண்ட அலுமினியப் பாத்திரம் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. இவ்வாறு இரண்டு அடுப்புகள் பானைகளுடன் எரிந்து கொண்டிருந்தது. 

ராமன் அங்கு அடுப்புகளில் முன்பு எரிக்கப்பட்ட கரியை தேடினான் கொஞ்சம் இருந்தது. ஏற்கனவே அதன் விலையை அவர்கள் அறிந்திருந்ததால் பெரிய அளவில் பேரம் நடக்கவில்லை. அங்கு கரி குறைவாக இருப்பதால் இன்னமும் ஒரு சில மூட்டைகளாவது கிடைத்தால் தான் குறைந்த அளவேனும் பணத்தை பார்க்கமுடியும் என்று ராமன் கூறினான். ஆற்றங்கரை ஓரமாய் ஒரு குட்டு இருப்பதாகவும் அங்கு மூன்று நான்கு மூட்டை வரை கரி தேறும் என்றும் வந்தால் கூட்டி போவதாக அவனிடம் பரிசல்காரன் சொன்னான். 

ராமன் ஆவலடைந்து என்னை இந்த குட்டில் கரி அள்ளி மூட்டையில் கட்டிக் கொண்டிருக்கும் படியும் ஒரு மணி நேரத்தில் தானும் சிவலிங்கமும் வந்து விடுவதாகவும் கூறினான். என்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் நான் இந்த குட்டில் சேகரிக்கும் கரியை வாங்கவேனும் கட்டாயம் வருவான் என்ற நம்பிக்கையிருந்தது. நான் கரி அள்ளத் துவங்கினேன். பரிசலில் ராமனும் சிவலிங்கமும் கரையை நோக்கி போய்க்கொண்டிருந்தனர். அவர்கள் ஆற்றங்கரையை அடைந்து அப்பால் மறையும் வரை நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். 

அதன் பின்னே நான் இருக்கும் குட்டிலிருக்கும் மனிதர்களை பார்த்தேன். ஒருவன் நல்ல உயரமானவன். ஒடுங்கலான கன்னங்களும் சுருட்டைமுடியும் கொண்டிருந்தான். அவனின் மீசையை முறுக்கி விட்டிருந்தான். அவனின் ஒரு தோளில் ஆழமான தழும்பொன்றிருந்தது. ஏதேனுமொரு தகராறில் கத்தி பட்டிருக்கும் என்று யூகித்தேன். அவன் வலக்கையில் லட்சுமி என்று பச்சை குத்தியிருந்தான். அவனது அம்மா அல்லது மனைவியின் பெயராக இருக்கவேண்டும். அவனை சின்னு என்று பரிசல்காரன் கூப்பிட்டிருந்தான். 

மற்றொருவன் குள்ளமான கிழவன். அவனின் தலைமுடி செம்பட்டை நிறத்திலிருந்தது. நான் குழம்பிய நிலையில் முன்பு எப்போதோ எரிக்கப்பட்ட சாராய அடுப்பின் சிதறிக் கிடந்த கரிகளை பொறுக்கி சணல்பையில் நிரப்பினேன். அந்த வேலையும் கடுமையானதாகவே இருந்தது. சூரியனின் உச்சிவெயில் சீக்கிரம் என்னை களைப்படையச் செய்தது. நான் கரியை சேகரிக்க மண் மேடு போன்ற இடத்தில் கால் வைத்தபோது கால் சற்று பதிந்தது. டேய் தம்பி ஊறல் போட்டிருக்கு பார்த்து கால் வை என்றான் சுருட்டை முடிக்காரன் சின்னு. நான் அங்கு பார்த்த போது சில இரும்பு பேரல்களில் அதன் வாயினை துணியால் வேடுகட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்தனர்.

நான் இது என்னங்க என்றேன்

ஏன் நீயும் தொழில் கத்துகிட்டு வேறொரு குட்டிலே காய்ச்சப் போறயா?என்றான் சின்னு.

நான் படிச்சிகிட்டிருக்கேன் பத்தாவது ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறேன். அந்த இன்னொரு பையன் என் நண்பன் என்றேன்.

படிக்கிறவன் என்றதும் அன்புடன் பேசத் துவங்கினான் சின்னு. நீயேன் இங்க வந்தே? என்றான் கிழவன்.

தெரியாமல் வந்துவிட்டதை சொன்னேன்.

சின்னு ஒருமுறை சாராயப்பானையின் மேலிருந்த அலுமினிய குண்டாவில் குளிர்ந்த நீரை ஊற்றிவிட்டு அடுப்பை சற்று எரியூட்டிவிட்ட பின்பு சீமைவேலி மரத்தின் கிளையில் செருகப்பட்டிருந்த சோத்து தூக்குப்போசியினை எடுத்து சாப்பிட உட்கார்ந்தான். என்னை பக்கத்தில் வந்து உட்காரச் சொன்னான். தூக்குபோசியில் பழையசோறு இருந்தது. எனக்கு போசியின் மூடியில் கொஞ்சம் சோறும் நீச்சத்தண்ணீரும் ஊற்றிக் கொடுத்தான். நான் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அந்த பழைய சோற்று தண்ணீரில் உப்பு துளிகூட இல்லை. உப்பில்லையா? என்றேன்.

""நாங்க உப்பு போட்டு சாப்பிடமுடியாது. எந்நேரமும் தண்ணிரிலேயே கை நனைந்து கிடப்பதாலே உப்பு பட்ட கை பொத்தலாகி விடும்" என கையை நீட்டினான். உள்ளங்கை சொதசொத என ஊறி வெள்ளை நிறமாக இருந்தது. கிழவன் சாப்பிடாமல் அடுப்பை எரியூட்டிக்கொண்டிருந்தான்.

அவனின் கையும் அப்படியே இருந்தது. சின்னுவிடம் அந்த சாராய ஊறல்களை பற்றி கேட்டேன். நாட்டு சர்க்கரைப் பாகும், தட்டிப்போட்ட வெள்ளை வேலான் மரப்பட்டையும் நவாச்சரமும் கலந்த கலவையை சில நாட்கள் இப்படி ஈரப்பசையுள்ள இடத்தில் புதைத்து வைக்கும்போது அந்த கலவை நொதித்துப்போகும். அதில் காற்றுக் குமிழிகள் வெளிப்படும். அப்போது அந்த கலவையை சாராய அடுப்பின் அடிப்பானையில் ஊற்ற வேண்டும். அடுப்பை சூடாக்கி கலவையை கொதிக்க வைக்கும் சமயம் அந்த கலவையின் நீராவி, துவாரம் உள்ள மேல்பானைக்குள் போகும். 

அப்பானையின் மேலே உள்ள குளிர்ந்த நீர் நிரப்பிய அலுமினிய பாத்திரத்தில் அது பட்டு சொட்டுச் சொட்டாக வடியும். அது உள்ளிருக்கும் ஒரு பாத்திரத்தில் தேங்கும். அந்த பாத்திரத்திலிருந்து குழாய் வெளியே நீட்டியுள்ளது. எனவே நீட்டியுள்ள குழாயினை திறந்தால் சூடான சாராயம் கிடைக்கும் என்று விளக்கினான். பத்தாவது அறிவியல் பாடத்தில் வாளை வடித்தல் என்று படித்ததற்கு இணையானது தான் சாராயம் காய்ச்சும் செய்முறை என்று சின்னுவிடம் சொன்னேன். இப்போது கிழவன் சாப்பிட உட்கார்ந்தான். 

சின்னு அடுப்பையும் பாத்திர தண்ணியையும் கவனித்து வந்தான். சூடேறிவிடும் அலுமினியப்பாத்திர நீரை அடிக்கடி மாற்றி குளிர்ந்த நிலையில் அதனை வைத்திருந்தான். பேச்சின் ஊடே சின்னுவும் கிழவனும் கூலிக்கு அங்கு வேலை செய்வதையும் முதலாளி வேறு ஆள் என்பதும், காய்ச்சும் லிட்டர் அளவைப் பொறுத்து கூலியும், போலீஸ் மாமுல் எல்லாம் முதலாளியை சார்ந்தது என்பதுமான செய்தி அறிந்தேன். 

கிழவன் சாப்பிட்டவாறே சின்னுவிடம் சொன்னான். புது போலீஸ் அதிகாரி கெடுபிடி செய்யறதா பேச்சு, முதலாளி பேசப் போயிருக்கறாருன்னாங்க... ரெய்டு வந்தாலும் வருமாம் நேத்து பேசிக்கிட்டாங்க. முதலாளி போன வாரப் பணமே இன்னும் தரலை, இதைச் சொல்லி கூலி தராம இழுத்தடிப்பானப்பா... காலைலேயே பொண்டாட்டி சந்தை செலவுக்கு பணம் கேட்டு சத்தம் போட்டா, இந்த சரக்கை கொடுத்து இன்னிக்கு பணம் வாங்கனும் என்றான் சின்னு.

நான் சிறுகச் சிறுக இப்போது அரை மூட்டைக்கு கரியை சேகரித்திருந்தேன். மண்ணை லேசாக குச்சியால் கீறி புதைத்திருந்த கரியை எடுத்துக் கொண்டிருந்தேன். நான் இங்கு வந்து மூன்று மணி நேரத்திற்கு மேலே இருக்கும். இன்னமும் சிவலிங்கத்தையும் ராமனையும் பார்க்கமுடியவில்லை. நான் கரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆற்றில் தண்ணீர் சற்று நுரையுடன் கலங்கலாய் ஓடியது. புதுத்தண்ணீர் வருகிறது என்றான் சின்னு கிழவனிடம். மெல்ல வெய்யிலின் கடுமை குறைந்தது. 

சூரியன் மேற்கே சரிந்து கொண்டிருந்தான். சிவலிங்கமும் ராமனும் வரும் நம்பிக்கை எனக்கு குறைந்து வந்தது. என் முகத்தில் பீதியின் ரேகைகள் பரவிக்கொண்டிருந்தது. அதற்குள் இரண்டு பெரிய லாரி டியூப்களில் புதிதாக வடித்த சாராயத்தை புணல் வைத்து ஊற்றி கட்டி விட்டிருந்தார்கள். காவேரியின் தண்ணீர் மட்டம் சற்று உயரத்துவங்கியது. குட்டின் கரையில் ஒரு அடிக்கு நீர்மட்டம் ஏறியிருந்தது. 

சின்னுவும் கிழவனும் ஊறல் டின்களை மேடான பகுதிக்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தனர். கடைசி சாராயம் வடிக்கப் போகிறார்கள். நான் முடிவு செய்து கொண்டேன் சிவலிங்கமும் அவன் மாமன் ராமும் இன்றைக்கு வரமாட்டார்கள் என்று. நான் ஆற்றின் கரையையே பார்ப்பதை பார்த்து சின்னு என் தோளைத் தொட்டு கூப்பிட்டான். நான் திரும்பினேன். என் கண்கள் கலங்கியிருந்தது. ஆற்றை கடக்க சின்னுவும் கிழவனும் மட்டுமே எனக்கு உதவமுடியும்.

எனக்கு பயமா இருக்குதண்ணே

""இந்த நாசமாப்போன வியாபாரியை நம்பி இங்கே வந்திருக்கற பாரு" என்றான் சின்னு. 

எனக்கு அழுகை வெடித்து பொங்கியது. கிழவன் காய்ந்த வெள்ளைவேலாம்பட்டையால் எரிந்து கொண்டிருந்த அடுப்பை விட்டுவிட்டு என் அருகில் வந்தான். 

கவலைப்படாதே நான் உன்னை கரையிலே கொண்டு போய் விடறேன். ஆனால் கொஞ்சம் காத்திருக்கனும் அழக்கூடாது சின்னுவின் வார்த்தை ஆறுதலைத் தந்தது. நான் கரி அள்ளுவதை விட்டுவிட்டு சின்னுவுக்கு உதவி செய்தேன். ஆற்றிலிருந்து தண்ணீர் மொண்டு கொடுத்தேன். அடுப்பு எரிக்க விறகினையும் காய்ந்த மரப்பட்டையையும் எடுத்து வந்தேன். இப்பொழுது வெயில் முற்றிலும் தணிந்து விட்டது. நான் நேரமாக ஆக கலக்கம் அதிகரித்து திருத்திருவென விழித்து வந்தேன். 

என்னை கரையில் விட்டுவிட்டு முதலாளியிடம் சரக்கை சேர்த்துவிட்டு வருவதாகவும் அதற்குள் கடைசி சாராயத்தை வடித்து சேகரித்து வைக்கும்படியும் கிழவனிடம் அப்போது சின்னு சொன்னான் .

இரண்டு லாரி டியுப் சாராயம் பரிசலில் ஏற்றப்பட்டது. நான் சேகரித்த கரி மூட்டையை பரிசலில் ஏற்றிக் கொண்டபின் கிழவனிடம் சொல்லிவிட்டு பரிசலில் ஏறினேன். சின்னு பரிசல் துடுப்பை வழித்தான். ஆற்றின் நீரோட்ட வேகம் புதுத்தண்ணீர் வருகையால் அதிகரித்தது. அப்போது பரிசல் அசைவது அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. பரிசலை பாறைகளில் மோதாமல் துடுப்பை வழித்து ஓட்டுவது கடினமானதாகவும் இருந்தது. 

குட்டுக்கும் கரைக்கும் நடுவே எங்கள் பரிசல் வந்திருந்த சமயம் கிழவன் குரல் எழுப்பி சின்னுவை கூப்பிட்டான். சின்னு திரும்பி பார்த்தபோது ஓடிடு என்றான். பின் கிழவன் காவிரி ஆற்றில் குதித்து நீந்தத் துவங்கினான். அவன் நீரோட்ட போக்கில் போய் மறு கரையை நோக்கி நீந்துவது போல தெரிந்தது. வேறு சில குட்டுக்களிலிருந்தவர்களும் தண்ணீருக்குள் குதித்தனர். சிலர் பரிசலை வேகப்படுத்தினர். போலீஸ்காரர்கள் சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்க வருவதை நான் யூகித்துக் கொண்டேன். 

இரண்டு வேன்கள் கரையில் நின்றது. இரண்டு பரிசல்களில் போலீஸ் ஆற்றில் வந்து கொண்டிருந்தனர். நாங்கள் போகவிருந்த கரை அதற்கு தள்ளியும் போலீஸ் இருந்தனர். சின்னு கணநேரம் யோசித்து விட்டு பரிசலை கெட்டியா பிடிச்சுக்க கரைக்கு போயிடும். இல்லைனா துடுப்பை போடு என்று கூறிவிட்டு தண்ணீரில் குதித்து நீந்தத் துவங்கினான் பரிசல் குலுங்கியது. பரிசலில் சாராய டியூப்களுடன் நீச்சல் தெரியாத நான்மட்டும். எனக்கு அச்சத்தில் கைகால் நடுங்கியது. என் பரிசல் ஒரு பாறையின் மீது நீரோட்டத்தில் மோதி கவிழ்ந்தது. நான் தண்ணீரில் தத்தளிக்கின்றேன்.

வேகமாக காவேரி என்னை இழுத்துப் போகிறது. என் வாயிலும் மூக்கிலும் தண்ணீர் புகுகிறது. இரண்டுமுறை நான் தலையை தண்ணீருக்கு மேலே கொண்டுவந்தேன், நான் செத்துக் கொண்டிருக்கிறேன். வீடு, அம்மா, மீன் பிடிக்கும் ஆற்றங்கரை என எல்லாம் நொடிப்பொழுது வந்து போகிறது. நான் மூழ்குகிறேன். என் கடைசி மூச்சும் விடைபெறப்போகிறது. என்னுள் மரண அதிர்வுகள். மெல்ல இருள் கண்களை கவ்வுகிறது.

ஒரு கணநேர அளவில் மரணம் நிற்கிறது. என்னை ஒருகை தலைமுடியை பிடித்து மேலே தூக்குகிறது. நான் தண்ணீருக்கு மேலே வருகின்றேன். என் தலைமுடி நீரோட்டத்தின் எதிர்த்திசையில் இழுபடுகிறது. அந்த கைகள் வெண்ணிறமானது. உப்பு பட்டால் புண்ணாகக்கூடியது. அது சின்னுவின் கைகள். ஒரு போராட்டத்திற்கு பின் நான் கரையில் சேர்க்கப்பட்டேன். பாதி நினைவுகள் மட்டுமே எனக்கிருந்தது. போலீஸ் சின்னுவை சூழ்ந்து கொண்டது.

சில அடிகள் அவனுக்கு விழுந்தது. என்னையும் சாராயக்காரன் என நினைத்து என் கால்களை மிதித்த ஒருவனையும் பள்ளிக்கூடம் படிக்கிற பையன்... கரி அள்ள வந்தான். அவனை விட்டுடுங்க என்றான் சின்னு. ஒரு பெண் சின்னுவுக்காக அலறியபடி வந்தாள். அவள் அவனின் மனைவியாக இருக்க வேண்டும். யாரோ என்னை குப்புறபடுக்கச் செய்து வயிற்றிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை வெளியேற்றச் செய்த சமயம் பழைய சாராயப்பானைகளை தலையில் சுமக்க செய்து சின்னுவை போலீசார் கூட்டிச் சென்றார்கள். காதுக்குள் கொய்ங்... என்ற சப்தம்.

மெல்ல இருள் சூழ்ந்து கொண்டது. தீராத இருள் கண்களுக்குள். நான் இருள் சூழலிருந்து மேலே வருகின்றேன். என்னால் உடலை அசைக்க முடிகிறது. கண்களை திறக்க முயன்றேன். ஒற்றையாய் ஒரு விளக்கின் வெளிச்சம் மட்டும் தெரிகிறது. என் நெற்றியில் துணியை நனைத்து பத்து போடப்பட்டிருக்கிறது. என்மீது சில துணிகள் போர்த்தப்பட்டுள்ளது. இது என் அம்மா பக்குவமாக இருக்க வேண்டும். என் அம்மாவிடம் நான் வந்துவிட்டேனா? என் உடல் களைத்திருக்கிறது. என் கால்களுக்கு அருகில் யாரோ படுத்திருக்கிறார்கள். மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன். 

காக்கைகளின் இடைவிடாத சப்தம் கேட்கிறது. நான் கண் திறந்து பார்க்கிறேன். இருட்டு கலந்த வெளிச்சம். நான் ஒரு குடிசையினுள் படுத்திருக்கின்றேன். அந்த குடிசை எனக்கு இதற்குமுன் எப்போதும் அறிமுகமாகாத ஒன்று. என்மீது ஒரு போர்வையும் இரண்டு சேலைகளும் போர்த்தப்பட்டுள்ளன. காய்ச்சல் மிகுந்து குளிர் கண்டு இரவில் நடுங்கியிருப்பேன் போலும். என் கால்களுக்கு பக்கமாய் ஒரு சிறுமி படுத்துக் கிடந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயதிருக்கும். எழுந்து விடவேண்டும் என தோன்றியது.முடியவில்லை. குடிசைக்கு வெளியே யாரோ சீமாற்றினால் வாசல் பெருக்கும் ஒலி கேட்கிறது. கூடவே பேச்சு சப்தம்.

"வீட்டுக்காரனை போய் ஸ்டேசன்லே பார்த்தியா? முதலாளிகிட்டே தகவல் சொன்னியா?"

மறுபக்கம் பதிலில்லை. தொடர்ந்து வாசல் பெருக்கும் சப்தம். ""உன் புருசனை பிடிச்சிட்டு போனதுமே ஸ்டேசனுக்கு போயிருந்தா கொஞ்சம் அடியாவது குறைஞ்சிருக்கும். நீ என்னவோ ஆத்துலே போன ஒரு பையனை கொண்டுவந்து உன் மகனாட்டம் கவனிச்சுகிட்டிருக்கறே..."

நான் எங்கு படுத்துள்ளேன் என்பதை என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. வாசல் கூட்டும் சத்தம் நின்றதும் ஒரு பெண் குடிசைக்குள் நுழைகிறாள். அவள் சின்னுவின் கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் லட்சுமியாகத் தானிருக்கும். நான் எழ முயல்கிறேன். தலை வலிக்கிறது. அவள் என்னை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்து ""எந்திரிக்க வேண்டாம், இன்னும் விடியல, படுத்துக்கப்பா" என்கிறாள். 

என் கண்களில் அவளை கண்டதும் கண்ணீர் பெருகியது. சின்னுவை நினைத்துக் கொண்டேன். மீண்டும் அழுகை அதிகமானது. அவள் என் கண்ணீரை துடைத்துவிட்டாள். ""உனக்கு ஒன்னும் ஆகல, நீ நல்லா இருக்கிறே பயப்பட வேண்டாம். விடிஞ்சதும் உங்க ஊருக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன். என் நெற்றியில் கையை வைத்து அழுத்துகிறாள். தலைவலிக்கு சற்று ஆறுதலாயிருந்தது. மீண்டும் என் கண்ணீரை துடைத்து விட்டாள். நான் அவள் கையை பிடித்துக் கொண்டு ""அம்மா" என்றேன். 

மெல்ல விடியத்துவங்கியிருந்தது. 

""எந்த ஊர் நீ போகனும்"

நான் அங்கு வந்ததை சொல்லிமுடித்தேன்.

""போலீஸ் சுத்திக்கிட்டிருந்ததாலே, பயந்துக்கிட்டு கூட வந்தவங்க போயிருப்பாங்க. நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்" என கூறிவிட்டு அவள் எழுந்து எனக்கு டீ வைக்க அடுப்பு பக்கம் போனாள். காய்ந்த வெள்ளவேலாம் பட்டைகள் மடமடவென அடுப்பில் எரிந்து டீ தயாரானது. நான் டீக்குடித்து முடித்து முகம் கழுவி உட்கார்ந்தபோது பிழிந்து காய வைத்திருந்த என் சட்டையை எடுத்துக் கொடுத்தாள். என்னை கூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தாள்.

கூடவே அவளின் மகளும் வந்தாள். அப்போது ஒரு சிலர் அவளிடம் சின்னுவைப்பற்றி விசாரித்தார்கள். ""போய் பார்க்கனும்" என்று மட்டும் சொன்னாள். ஆற்றில் விழுந்த என்னை சிலர் பார்த்தனர். பேருந்து நிறுத்தத்தில் என் கையில் பத்து ரூபாயை திணித்தாள். எனக்குள் கொஞ்சம் தடுமாற்றமும், பலகீனமும் இருந்தது. திடுமென்று என்னை கையைப் பற்றிக்கொண்டு அவளும் பேருந்தில் ஏறிக்கொண்டாள்.

""ஊருக்கு வந்து விட்டுட்டு வந்திடறேன் தனியா அனுப்ப மனசு வரல""

பேருந்து காவேரியின் ஒரு கரையை ஒட்டி நீண்டிருந்த தார்ச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. சூரிய வெளிச்சத்தில் சிறுசிறு நட்சத்திரத் துகள்கள் போல பிரதிபலிப்பு நீரில் எதிரொலித்தது. ஆற்றில் புதிய தண்ணீர் செம்மண் நிறத்தில் ஓடியது.

பின்னொரு நாளில் நான் காவேரியில் நீந்த கற்றுக் கொண்டேன். காவேரி நீச்சலை மட்டுமல்ல சின்னு, லட்சுமியின் மூலமும் எனக்கு பல புதியவற்றை கற்றுக் கொடுத்திருந்தது. அந்த புதியவற்றிற்கு தலைப்பிடவோ, இன்னது என வரையறை செய்யவோ என்னால்முடியவில்லை. ஆனால் ஆசானாய் இருந்து ஆறு எனக்கு கற்றுத்தந்த அந்த புதியவை வாழ்வின் எல்லா கணங்களிலும் உடன் வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.

எடு நூறு ரூபாய் -இல்லையுன்னா போடர்ரா முட்டி

இது எங்கள் நெடுஞ்சாலை

June 06, 2010

யுவர் ஆனரும்......... ஒரு பேனரும்



கடல்காற்று சிலிர்த்துக்கொண்டிருந்தது


கோட்டுகளை கக்கத்தி இருக்கியபடி வெள்வால்கள் தனது கூட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தன


கோர்ட்வளாகத்தில் ஒரு வாரமாய் பயங்கரமான பரபரப்பு


எல்லாரும் மத்தியானமான தண்ணியில மொதக்குறாங்க சிக்கன தின்னுட்டு பல்லு குத்தீட்டு வர்ராணுக..... என்ன விசேசம்


ஒன்றுமில்லை நம் மரக்கேசு மணிகண்டன் வங்கீல் சங்க செயலாளர் தேர்தலில் நிக்கறார்


மணிகண்டணா???????


ஆமா....


என்ன மணிகண்டா எலக்சனுல நிக்கறயாமா?


ஆமாம் மாப்புளே எல்லாருக்கும் என்ன கண்ட எளக்கநாட்டமா போயிருச்சு

கையில காச்சுக்கு பஞ்சமில்ல தோட்டம் தொரவு பேருண்ணு பெருசா இருந்தும் இவுனுக எளக்கநாட்டம் கொறையல


மரம் மரம் ன்னு மானம் போகுது மரியாத வரவெக்கத்தான் இந்த பிளான்


பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் என்று பாட்டுகேட்டாலே ஏதாவது கேஸென்று சிவபெருமானை கிளையண்ட் ஆக்கிவிடும் வல்லமை இந்த ஏழேழு உலகத்திலும் நம்ம மணிக்கு மட்டும்தான் இருப்பதாக வக்கீல்களிடம் ஒரு புரளி இன்னும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறது


நீங்க நிக்காம யாரு நிக்கறது??!! பழனிசாமி தன் பங்குக்கு கொஞ்சம்

உசுப்பேத்திவிட்டு ஒரு தம்மடித்தார்


காக்காய் மணிகடன் தலைமேல் மலம்ஜலம் கழித்துவிட்டு

கர்ன்னு கத்தீவிட்டு கேண்டீன் பக்கம் போனது


இந்த மரத்துகிட்ட நின்னாலே இப்படித்தான் தன் வாழ்வில் முதன்முறையாக மரத்தை சலித்துகொண்டார் மணிகண்டன்


கழிவறைக்குள் போய் திரும்பினார்


இன்னைக்கு பாத்துர ஒரு கை


போகிற வர்ரவங்க கிட்ட எல்லாம் கையெடுத்து கையெடுத்து கும்பிட்டார் மணி இதை கண்டு நமுட்டுச்சிரிப்பு சிரித்த அவரது கிளையண்டை கண்டும் காணாமல் முகத்தை திருப்பி உடம்பை ஆட்டி ஆட்டி ஓட்டுக்கேட்டார்


இப்படி கேட்டுக்கொண்டே அவர் இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் பாலத்துக்கு வந்திருந்தார்


இப்போது மணி நான்கிருக்கும்


நிறைய டீசண்டான வெளவ்வால்கள் தன் பணிமுடித்து திரும்பிக்கொண்டிருந்தது


மழைக்குக்கூட மணிகண்டன் இந்த சிவில்கோர்ட் பக்கம் தலைவைத்ததில்லை


வேற வழியில்லை மயில் வேசம் போட்டா மரத்துக்கு போய்தான் ஆகனும்


எல்லோருக்கும் ஒரு கும்பிடும் கைகுலுக்கலும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது


ஒரு வெள்ளை வேளேர் உருவமொன்று கோட்டை தோளில் போட்டபடி சுலோமோசனில் பாலத்தை கடந்தது


அதை ஒரு டைவ் அடித்து நிறுத்திய நம் மணி


சார் நான் மணிகண்டன் எனக்கே ஓட்டுப்போடுங்க!! சிரிப்பு வழிய கேட்டார்


ம்கூம்........


சார் எம்பேர் மணிகண்டன் நான்......


முகத்தை பதினைந்து கோணத்தில் மாற்றி


ம்கூம் முடியாது


ஏன் சார் இப்படி சொல்லறீங்க


நான் ஓட்டு போட முடியாது பிரதர் .... கடுப்புடன் அவர்


ஏன் போடமுடியாது ?


எனக்கு ஓட்டு இல்லே!


உங்களுக்கு ஓட்டு இல்லையா?


ரயில்வே ஜங்சனுக்கும் கோர்ட்டுக்கும் குதித்தார்


என்ன நடக்குது பாருல? யாரோ சதி செஞ்சிருக்காங்க? இத நான் விடப்போவதில்லை உங்களுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன் சார்


வாங்க.....


கைய பிடித்து அடுத்த வக்கிலின் கிளையண்டைபோல் இழுத்தார்


வாங்க சார் .....வாங்க.....


கையை உதரிய அந்த வெள்ளை உருவம் திமுறி திருவாய் மலர்ந்தது


நான் முன்சீப்ங்க(சிவில்கோர்ட் ஜட்ஜ்)!!!!!!!!!!!!!!!


அட்டன்சன் ஆன மணிகண்டனிடம் வழிந்த அசடு கோர்ட்டை மூழ்கடித்தது....


அந்த ஈரம் இப்போதும் கோர்ட்டின் கட்டிடங்களில் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

June 02, 2010

ஒடியன் அறிமுக நிகழ்வு -வங்கி ஊழியர்கள் சங்கம் ,கோவை

கவிஞர் புவியரசு
வழக்கறிஞர் ச பாலமுருகன்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க செயளர் வி பி குணசேகரன்
எழுத்தாளர், வழக்கரிஞர் ஞானபாரதி
எழுத்தாளர், வழக்கரிஞர் முருகவேள்
கவிஞர் க.மு




Footer